Courtesy: Subramniyam Thevanthan
கிளிநொச்சியில் (Kilinochchi) விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை
பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் குறித்த நபர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இவரிடம் குறித்த
விளையாட்டு பயிற்சிக்காக சென்ற சிறுவர்களில் 16 பேரையே அவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
வாக்குமூலத்தின் அடிப்படையில்..
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 10
தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவர்களில் சிலரின் நடத்தைகளில்
மாற்றம் மற்றும் கல்வியில் திடீர் பின்னடைவு என்பவற்றின் அடிப்படையில்
கவனம் செலுத்திய போது ஆரம்பத்தில் இரண்டு சிறுவர்கள் மூலமே விடயம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட
போது குறித்த பயிற்றுவிப்பாளரால் 16 சிறுவர்கள் இவ்வாறு
துஸ்பிரயோகத்திற்குள்ளான அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்
விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸாரின் கவனத்திற்கு விடயம்
கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்றைய தினம் (11) கிளிநொச்சி பொலிஸ்
நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன்
அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட
சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பெற்றோர் கவலை
தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கைகளில் அதிருப்தி
முன்னதாக சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு சென்ற பொலிஸார்
சிறுவர்களை மாலை 4 மணிவரை அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளதோடு அவர்களை
பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையம் ஏற்றிச்செல்ல முற்பட்டுள்ளனர் என பெற்றோர் குறிப்பிட்டுள்ளதோடு பொலிஸாருடன் அங்கு முரண்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் பிள்ளைகள்
குற்றவாளிகள் அல்ல அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எனவே அவர்களின்
உளவியலை புரிந்து கொண்டு பொலிஸார் நடந்து கொள்ள வேண்டும் என
வலியுறுத்தியதோடு விசாரணைகளுக்காக பிள்ளைகளை தாம் பொலிஸ் அழைத்து
வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து பொலிஸார் விலகிச் சென்றுள்ளனர்.
சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் வகையில்
பெற்றோரை இந்த பிரச்சினையில் தாமாக விலகிக்கொள்ளும் விதமாக பொலிஸாரின்
நடவடிக்கைகள் அமைந்துள்ளது என்றும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.