இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முற்பட்ட பெருந்தொகையான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (11) அதிகாலை ஒருமணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
கட்டுநாயக்கவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கவிருந்த நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே அவ்வாறு சட்டவிரோதமாக பெருந்தொகையான வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
அபராதம் விதிப்பு
சுங்கத்துறையின் சோதனையின் போது அவரிடம் இருந்து 41 ஆயிரம் யூரோக்கள், 40 கனேடிய டொலர்கள், 15 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள், 15 ஆயிரம் சவூதி றியால் மற்றும் 40 லட்சம் ரூபா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்தப் பெறுமதி இலங்கை நாணய மதிப்பில் 2 கோடியே நாற்பது இலட்சமாகும்.
குறித்த பணத்தொகை சுங்கத்திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், அதனை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முற்பட்ட வர்த்தகருக்கு 31 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.