தனியார் பத்திரிகையொன்றின் தலைமை ஆசிரியர் குற்றப் புலனாய்வு துறை
விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அனுமதி பெறுவது தொடர்பான நடைமுறைகள் குறித்த செய்தி அறிக்கை
தொடர்பிலேயே அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், ஊடக உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்
பத்திரிகை சுதந்திரம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளனர்.
போலிச் செய்தி
பொலிஸ் அனுமதி சான்றிதழ்களை வழங்கும்போது உள்ளூர் பொது பாதுகாப்புக் குழுவின்
ஒப்புதல் பொலிஸுக்கு தேவை என்று கூறும் செய்தியை குறித்த தனியார் பத்திரிகை
வெளியிட்டிருந்தது.

எனினும், அரசாங்கம் அந்த அறிக்கையை பொய்யானது என்று நிராகரித்தது. பொது
பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அத்தகைய தேவை இல்லை
என்றும், தனது அமைச்சகம் அல்லது பொலிஸாரால் எந்த அதிகாரப்பூர்வ
சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல எதிர்க்கட்சித்
தலைவர்கள் இந்த அறிக்கை துல்லியமானது என்று கூறினர். நடைமுறையில் விண்ணப்பதாரர்கள் பொலிஸ் அனுமதி சான்றிதழ்களைப் பெற பொது
பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையைச் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுகிறார்கள்
என்பதைக் குறிப்பிட்டனர்.

முன்னதாக, குறித்த செய்தித்தாள் செய்தியை போலிச் செய்தி என்று கண்டித்த
அமைச்சர் விஜேபால, தவறான மற்றும் தெளிவற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டதாகக்
கூறி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், முறைப்பாட்டை செய்துள்ளதாக
தெரிவித்திருந்தார்.

