காலியில் உள்ள ஒரு முன்னணி உணவகம் ஒன்றில் உணவு ஓர்டர் செய்துவிட்டு உணவுக்காகக் காத்திருந்த ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட்ட ஒரு குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு குறித்த உணவகத்திற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தக் குடும்பத்தினர் நேற்று (16) இரவு உணவகத்தில் உணவை ஓர்டர் செய்துள்ளனர். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, உணவு தீர்ந்துவிட்டதாக உணவக மேலாளர் கூறியுள்ளார்.
தாமத அறிவிப்பு
அப்போது அங்கிருந்தவர்கள், “உணவு இல்லை என்று அவர்களுக்குத் தெரிவிக்க ஏன் 30 நிமிடங்கள் ஆனது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் உணவக ஊழியர்கள் அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், உணவகத்தில் சுமார் 30 பேர் தாக்கியதாக கூறப்படுவதுடன் அவர்கள் தாக்கப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அவர்களது குடும்ப உறுப்பினர்களில் மற்றொரு குழுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.
இருப்பினும், உணவக ஊழியர்களால் அவர்களும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் 28 வயது இளைஞனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் 17 வயது சிறுவனுக்கு கண்ணில் காயம் மற்றும் 14 வயது சிறுவன் ஒருவனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.