ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2222.04.2025) நடந்த தீவிரவாதத் தாக்குதல் இந்திய பாதுகாப்பு மற்றும் மோடி அரசிற்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீவிரவாத தாக்குதல்களில் குறைந்தது 26க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியும் (Narendra Modi) உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளமை மேலும் பதற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற முடிவு
இவ்வாறான நிலையில், பாகிஸ்தான் (Pakistan) நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) அறிவித்துள்ளார்.
குறித்த முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாற்றம் இன்றியும் கைவிடும் வரை இது தொடரும் என விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அந்நாட்டின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் விரும்பத்தகாதவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து பாதுகாப்பு, இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களுக்கான பணியிடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆலோசனைக்குப் பின், பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
இந்நிலையில், பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் தமது நாட்டிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுகள் இந்திய அரசுக்கு எதிரான உள்நாட்டு கிளர்ச்சிகளின் விளைவாகவே நிகழ்ந்ததாக அவர் வர்ணித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை காரணம் காட்டுவது “எளிதானது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதிகளின் ஓவியங்கள்
இந்த நிலையில் குறித்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று தீவிரவாதிகளின் ஓவியங்களை பாதுகாப்பு துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் இவர்கள் மூவரும் வரையப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹல்காமில் செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்த மோசமான தாக்குதலை நடத்தியது யார் என்ற அதிகாரப்பூர்வ உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயற்பட்டு வரும் ஆயுதக்குழுவான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய அதிகம் அறியப்படாத தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கலாம் என உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோளிட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு, பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகளை ஆட்சேர்ப்பு செய்தல், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்தல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்துதல் போன்ற பிரச்சாரங்களுக்காக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் TRF ஐ “பயங்கரவாத அமைப்பு” என்று இந்திய உள்துறை அமைச்சகத்தினால் (MHA)அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.