இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினரின் விசா காலமும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, விசா காலாவதியான அனைவரும் இந்த சலுகைக்கு தகுதி பெறுவார்கள் என்றும், 9 விசா வகைகளுக்கு இந்த சலுகை கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் இருந்து அனுப்பப்படவிருந்த 119 பேரை வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் இலங்கைத் தூதுவர் கூறியுள்ளார்.
விசா நீட்டிப்புகள்
விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமானதுடன், அவர்கள் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்குத் தேவையான விசா நீட்டிப்புகள் மற்றும் தூதரகத்திற்கு குடிவரவு சேவை வழங்கப்படும் என இஸ்ரேல் குடிவரவு சேவைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போர் தொடங்கிய பிறகு விசா காலாவதியான எவருக்கும் இஸ்ரேலுக்குத் திரும்புவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போரில் காயமடைந்த நான்கு பேரில் இருவர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், தூதரகம் அவர்களின் தகவல்களை தினமும் சரிபார்த்து வருவதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்
அத்தோடு, அவர்கள் அனுபவித்து வரும் மன அழுத்தத்தைக் குறைக்க அவர்களைச் சந்திக்க பல இலங்கையர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு 24/7 தூதரகம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் சிக்கலில் உள்ள இலங்கையர்களும் அவர்களது குடும்பத்தினரும் வட்ஸ்அப் மூலம் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார கூறியுள்ளார்.

