திருகோணமலையில் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
திருகோணமலை அலஸ்வத்த பகுதியில் நேற்றுமுன்தினம்(07) இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்துகொண்ட வெளிநாட்டு பெண் ஒருவரை தகாத முறையில் இருவர் தொட முயன்றுள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பில் விசாரிப்பதற்காக குறித்த பெண்ணின் கணவன் சென்ற போது அவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் ஜூலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், மற்றொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடும் பணிகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அமைதியை உறுதி செய்வதில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

