இலங்கையைச் சேர்ந்த 24 வயது மாணவி ஒருவரை ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பின்தொடர்ந்ததற்காக இந்திய குடிவரவுத் துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, கடந்த மூன்றாம் திகதி பிற்பகல் 5 மணி அளவில் நடந்ததாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ஹைதராபாத் வந்த இந்த மாணவி, சத்தீஸ்கரில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார்.
அதிகாரியின் இழிசெயல்
இந்த நிலையில், சம்பவதினமொன்று பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பில் இருந்து ஹைதராபாத் வந்த இண்டிகோ விமானம் 6E-1182 மூலம் விமான நிலையத்தை அடைந்துள்ளார்.
அதனை தொடர்ந்து, ராய்ப்பூர் செல்லும் அடுத்த விமானம் தாமதமானதன் காரணமாக அவருக்கு விமான நிலையத்திலேயே 16 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர் குடிவரவுத்துறை கவுன்டரில் தனது விவரங்களை வழங்கியபோது, அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர், அவர் தனியாக இருப்பதைக் விசாரித்து, தனது தொலைபேசி எண்ணை வழங்கி, உதவி தேவைப்பட்டால் அழைக்குமாறு கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாது, மாணவி விமான நிலையத்தில் காத்திருந்தபோது, சந்தேகத்துக்குரிய அதிகாரி மீண்டும் அவரை அழைத்து வாகனம் நிறுத்தும் பகுதிக்கு வருமாறு கூறி நகரம் முழுவதும் சுற்றிக்காட்டுவதாகவும் பைகளை தனது அலுவலகத்தில் வைக்கலாம் என்றும், இரவு உணவுக்கு அழைத்துச் செல்லவதாகவும் தெரிவித்துள்ளார்.
வழக்குப் பதிவு
மாணவி மறுத்த பிறகும், அதிகாரி தொடர்ந்து வற்புறுத்தும் வகையில் அழைத்து, ஒரு அறைக்கு சென்று அங்கு ஓய்வெடுக்கலாம் என்றும் கூறியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
இந்த செயலால் பதற்றமடைந்த மாணவி, தனது நண்பரிடம் தொடர்பு கொண்டு, அவரது ஆலோசனையின் பேரில், விமான நிலைய காவல்துறையை அணுகி எழுத்துப்பூர்வமான முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
மாணவி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த அதிகாரிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றஞ்சாட்டப்பட்டவர் குடிவரவுத் துறையில் பணிபுரியும் ஒருவர் என அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், சந்தேகத்துக்குரிய அதிகாரிக்கு எதிராக தற்போது ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவரை விசாரணை அதிகாரிக்கு முன் முன்னிலையாகுமாறு சட்டபூர்வமான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.