தமிழ்நாட்டின் கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் இணைச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் நீதிமன்றம்
இந்த நிலையில் சி.பி.ஐ. தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கரூர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் பிரதி கேட்டு த.வெ.க. வழக்கறிஞர்கள் சார்பில் நேற்று (25) மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, த.வெ.க.வினருக்கு சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை நகலை கொடுக்க உத்தரவிட்டதையடுத்து த.வெ.க. வழக்கறிஞர்கள் முதல் தகவல் அறிக்கையின் பிரதியைப பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

