மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தடுத்து கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக
களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் 56 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அழைப்பாணை வெல்லாவெளி பொலிஸ் ஊடாக 35ஆம் கிராம பகுதியில் உள்ள
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட 35ஆம்கிராமம் கண்ணன்புரம் பகுதியில் தொல்பொருள்
திணைக்களத்தினால் பெயர்ப் பலகையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது
அதற்கு எதிராக பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடுமையான எதிர்ப்பு
பொலிஸாரின் உதவியுடன் இந்த பெயர்ப்பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்த
நிலையில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக குறித்த பணியை
இடைநிறுத்தியதுடன் அங்கிருந்தவர்களின் விபரங்களை பொலிஸார்
சேகரித்துச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் வெல்லாவெளி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் தொல்பொருள்
திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி களுவாஞ்சிகுடி நீதிவான்
நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் 35ஆம் கிராமத்தில்
உள்ள 56பேருக்கு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் அண்மையில்
நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்திருந்த நிலையில் அவருக்கும்
அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.அத்துடன் ஒரு குடும்பத்தில் பலருக்கு இவ்வாறு
அழைப்பானை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.



