எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அனையாடைகளை(Sanitary Towel & Liner) விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன ஆகியோரின் தலைமையில் பாடசாலை மாணவிகளின் சுகாதாரம் குறித்த கலந்துரையாடல் நேற்று (22) இசுருபாய கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் திட்டம்
2024 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற, தோட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவிகளை இலக்காகக் கொண்டு ஒரு தேசிய திட்டமாக கல்வி அமைச்சினால் தொடங்கப்பட்டு, 2026 முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 6 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை இலக்காகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கியதாக, பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு
இந்த நோக்கத்திற்காக அரசாங்கம் ரூ. 1.44 பில்லியன் ஒதுக்கியுள்ளது, சானிட்டரி நாப்கின்களை வாங்குவதற்காக மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1,440 வழங்கப்படும் எனவும், மாகாண கல்வி அலுவலகங்கள் மூலம் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரத்தரத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் பாடசாலைகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

