இலங்கையின் மொத்த பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
2026 ஜூன் மாத இறுதியளவில் இவ்வாறு கடன் தொகை அதிகரித்துள்ளதாக பொதுக் கடன் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளியியல் கடன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி, நாட்டின் மொத்த பொதுக் கடன் 32.977 டிரில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இது மார்ச் மாத இறுதியில் 32.233 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் மட்டும் சுமார் 744 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.

எனினும், ரூபாய் மதிப்பில் கடன் தொகை அதிகரித்துள்ள போதிலும், அமெரிக்க டொல மதிப்பில் அளவிடும் போது நாட்டின் கடன் இருப்பு குறைந்துள்ளது.
மார்ச் மாத இறுதியில் 102.27 பில்லியன் டொலராக இருந்த கடன் தொகை, ஜூன் இறுதியில் 97.95 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
ஜூன் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 336.6623 ரூபாவாகக் கணக்கிடப்பட்டதே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்தக் கடனில் பெரும்பகுதியை மத்திய அரசின் கடனே வகிக்கிறது. இது மார்ச் மாத இறுதியில் 31.193 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் இறுதியில் 31.999 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டுக் கடன்: 19.203 டிரில்லியன் ரூபாவாகவும், வெளிநாட்டுக் கடன்: 12.796 டிரில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடனில் பன்முகக் கடன்கள் 38 சதவீதமாகவும், வணிகக் கடன்கள் 34 சதவீதமாகவும், இருதரப்புக் கடன்கள் 28 சதவீதமாகவும் உள்ளன.
சீனா, இலங்கைக்கு 5.01 பில்லியன் அமெரிக்க டொலரையும், ஜப்பான் 2.27 பில்லியன் அமெரிக்க டொலரையும், இந்தியா 853.9 மில்லியன் அமெரிக்க டொலரையும் கடனாக இலங்கைக்கு வழங்கியுள்ளன.
மேலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் அரசாங்க உத்தரவாதக் கடன் 971 பில்லியன் ரூபாயாகவும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான கடன் சுமார் 7 பில்லியன் ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
Source: https://tamilwin.com/article/sri-lankas-public-debt-rises-to-nearly-rs-33-trill-1788282814

