இன்றைய உணவு நெருக்கடிக்கான தீர்வு, காலத்தைப் பின்னோக்கிச் செல்வதிலும் இல்லை, கடந்த காலப் படிப்பினைகளை மறப்பதிலும் இல்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பூட்டானில் நடைபெற்ற 2026 உலகளாவிய விழிப்புணர்வு உணவு அமைப்புகள் உச்சிமாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் நிலையான மற்றும் மீள்திறன் கொண்ட உணவு அமைப்புகளைக் கட்டமைப்பதற்காக, நவீன தீர்வுகளைத் தழுவிக்கொண்டே பாரம்பரிய ஞானத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் வறண்ட மண்டலம்
உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர்,
“இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுடன் நெருங்கிய உறவைப் பேணிக்கொண்டே, சமூகங்கள் உணவுப் பாதுகாப்பை அடைய உதவும் உணவு தொடர்பான அறிவு மற்றும் நடைமுறைகளின் வளமான பாரம்பரியத்தை இலங்கை கொண்டுள்ளது.

இலங்கையின் பண்டைய வேவா-கம அல்லது குள-கிராம அடுக்கு அமைப்பானது, மனித வரலாற்றில் நீடித்த வள மேலாண்மையின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.
சுமார் 2,000 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்ட, இலங்கையின் வறண்ட மண்டலம் முழுவதும் பரவியுள்ள ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களின் வலையமைப்பு, தண்ணீரைச் சேமிப்பதற்காக மட்டுமல்லாமல், முழுமையான சூழல் அமைப்புகளையும் சமூகங்களையும் நிலைநிறுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது.
இயற்கைச் சூழலின் ஆரோக்கியத்தையே மனித வளம் சார்ந்துள்ளது என்ற பரந்த புரிதலைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், இந்த அமைப்பு விவசாயம், வீட்டுத் தோட்டங்கள், காடுகள், கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கிறது.
இலங்கையின் பண்டைய ஆட்சியாளர்கள் வருங்கால சந்ததியினருக்காக வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர்.
ஆக்கப்பூர்வமான பயன்பாடு
ஒரு துளி நீர் கூட ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாமல் கடலில் கலக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று அறிவித்த, மாமன்னர் பராக்கிரமபாகுவுக்குக் கூறப்படும் புகழ்பெற்ற கொள்கையை நினைவுகூறவேண்டும்.
இந்தக் கொள்கையானது நீர்ப்பாசனத்திற்கான அர்ப்பணிப்பை விட மிக அதிகமானவற்றைப் பிரதிபலிக்கின்றது.

மாறாக, அது மேலாண்மை, நிலைத்தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு குறித்த ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தியது.
நீர் ஒரு பகிரப்பட்ட தேசிய வளமாகக் கருதப்பட்டது.
உள்ளூர் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் பயிரிடப்பட்டன.
வேளாண்மை, காடுகள், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மனிதக் குடியிருப்புகள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்த ஒரே அமைப்பின் பாகங்களாகச் செயல்பட்டன.
இலங்கையின் பண்டைய குள கிராம நாகரிகம், அதன் மீள்திறன், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவசாய பாரம்பரிய அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://ibctamil.com/article/prime-minister-harini-reveals-solution-food-crisis-1788248583

