வட்டுக்கோட்டையில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில்
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாவடி
பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவரது ஐம்பதாயிரம் ரூபா பணம் நூதன
முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.
ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் கைது
இவ்வாறு கொள்ளையடித்த, ஆனைக்கோட்டை –
உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் இன்றையதினம்(08) கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி கொஸ்தாவின் கீழ்
இயங்கும் காவல்துறை குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் குறித்த வீட்டுக்கு சென்று, தான் கமநலசேவை திணைக்களத்தில் இருந்து வருவதாக தெரிவித்து,விவசாய அழிவுக்கு நட்ட ஈடாக குறித்த பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் கூறி மேற்படி பணத்தை கொள்ளையடித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.