முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருவேலன் கண்டல் கிராம அலுவலர் பிரிவின் மானுருவி பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவரை காட்டு யானை தாக்கி அவர் பயணித்த துவிச்சக்கர வண்டியையும் சேதப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 08. 08 .2025 அன்று மாலை 7 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த நபர் 1990 அவசர நோயாளர்காவுவண்டி சேவை ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்,
குறித்த தாக்குதலில் 51 வயதுடைய சுந்தரம் சிவதாஸ் என்னும் குடும்பஸ்தர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அரச காணிகள்
இந்நிலையில் நேற்று (10.08.2025) குறித்த கிராம மக்கள் ஊடகங்களை அழைத்து ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

“தமது கிராமத்தில் மானுருவி கிராம வீதி ஓரத்திலே பல அரச காணிகள் துப்பரவாக்கப்படாமல் காடுகளாக காணப்படுகின்ற நிலைமையில் அதனூடாக பயணிக்கின்ற போது அந்த காடுகளுக்குள் நிற்கின்ற யானைகள் தாக்குகின்ற சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெறு வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தும் இதுவரை இந்த யானைகளை கட்டுப்படுத்த அல்லது யானை வேலி அமைத்து தர உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
அதேவேளையில் தமது கிராமத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி வாழ்வதாகவும் விவசாயத்தை நாளாந்தம் தொடர்ச்சியாக யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் தாம் வாழ்வாதாரம் இழந்து வருவதோடு பாடசாலை செல்கின்ற மாணவர்கள் முதல் வயோதிபர் வரை வேலைகளுக்கு சென்று திரும்புகின்றவர்கள்.

அதிகாலை வேளையில் செல்லும் போதும் இரவு வேளையில் வரும் போதும் குறித்த பாதைகளில் காட்டு யானைகளால் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதோடு தமது கிராமம் முற்று முழுதாக காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்குள் காணப்படுவதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த காட்டு யானைகளை கட்டுப்படுத்த யானை வேலி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீதி விளக்கு
அத்தோடு தமது கிராமத்தில் காணப்படுகின்ற அரசகாணிகளை காணியற்றவர்களுக்கு வழங்கியோ அல்லது காணிகளை துப்புரவு செய்து பராமரிப்பதன் ஊடாக இந்த யானை அச்சுறுத்தலில் இருந்து சற்று தாங்கள் நிம்மதியாக வாழ முடியும் எனவும் எனவே குறித்த நடவடிக்கையை விரைவாக எடுக்குமாறு அதனை விட புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் குறித்த பகுதிகளில் ஏற்கனவே பூட்டப்பட்ட மின்விளக்குகள் திருத்தத்திற்க்கென கொண்டு செல்லப்பட்டு,

இதுவரை கொண்டு வந்து பூட்டப்படவில்லை எனவும் வீதி விளக்குகளை பூட்டி தருவதனூடாக சற்று அச்சமற்ற வகையிலே செல்ல முடியும் எனவும் தெரிவிக்கின்றனர் எனவே பிரதேச சபையினர் குறித்த வீதிகளில் வீதி விளக்குகளை பொருத்தி தர வேண்டும் எனவும் இந்த செயற்பாடுகள் நடைபெறாத பட்சத்தில் தாங்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.








