அமெரிக்காவில் மூடநம்பிக்கைக்காக பெண்ணொருவர் பெற்ற தாயை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிலுள்ள கென்டக்கி(Kentucky) மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய டோரிலினா ஃபீல்ட்ஸ்(Torilena Fields) என்னும் பெண்ணே இவ்வாறு தனது தாயைக் கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
கொலைச் சம்பவம்
குறித்த பெண் மாயமந்திரம், சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் அவரது தாயாகிய ட்ரூடி ஃபீல்ட்ஸ்(Trudy Fields) அவரைக் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் தனது தாயை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியிருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, சமீபத்தில் ட்ரூடி ஃபீல்ட்ஸை சந்தித்த ஒருவரிடம் தனது மகள் செய்யும் விடயங்கள் குறித்து அவர் கூறியிருந்த நிலையில், ட்ரூடி ஃபீல்ட்ஸ் கண்டித்தமையினாலேயே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
கைது நடவடிக்கை
சம்பவத்தினத்தன்று காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீட்டுக்கு காவல்துறையினர் விரைந்த போது சந்தேகநபர் வீட்டுக்குள் பதுங்கியுள்ளார்.
இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீட்டுக்குள் வீசி சந்தேகநபரை வெளியே வரவைத்த காவல்துறையினர், உடல் முழுவதும் இரத்தத்துடன் காணப்பட்ட டோரிலினா ஃபீல்ட்ஸை கைது செய்துள்ளனர்.
மேலும், நடந்த கொடூர சம்பவம் தொடர்பில் அவரிடம் தீவிர விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகிறனர்.