முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழிலை இல்லாதொழிக்க இலங்கை பொலிஸ் ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கும், அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இணக்கப்பாடு
இந்த கலந்துரையாடலின் போது, முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாக பொருத்தப்பட்ட மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத மேலதிக பாகங்களை அகற்றுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்திற்கு இணங்காத ஆபத்தான முறையில் பொருத்தப்பட்ட உதிரிபாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.