அம்பாறையில் (Ampara) பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை (Sammanthurai) ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்து நேற்று (28) இரவு அம்பாறை நோக்கி பயணிகளுடன் சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி பேருந்துடன் மோதி விபத்தினை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக சாரதி சுதாகரித்து பேருந்தை நிறுத்த முற்பட்ட வேளை அருகில் இருந்த நீர் வாய்க்காலுக்குள் விலகி சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இருவர் காயம்
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பேருந்து நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் விபத்து இடம்பெற்ற அம்பாறை – வங்களாவடி பிரதான வீதிக்கு வருகை தந்த போக்குவரத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
40இற்கு அதிகமான பயணிகள்
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தில் 40இற்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்ததாக தெரவிவிக்கப்படுகின்றது.
மேலும், பேருந்து விபத்திற்குள்ளான போது சிலர் அதிர்ச்சியில் காணப்பட்டதுடன் மாற்று வாகனங்களில் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.