வல்லரசு போட்டிகளால், உலகம் துருவமுனைக்கப்படும் நிலையில், இலங்கை, அதன்
நீண்ட கால அணிசேராமை வெளியுறவுக் கொள்கைக் கோட்பாட்டில் உறுதியாக இருக்க
வேண்டும் என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
இந்தியப் பெருங்கடலில், இலங்கையின் மூலோபாய இருப்பிடம், பொருளாதார அபிலாஷைகள்
மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மை ஆகியவை அனைத்து உலகளாவிய தரப்புக்களின் கவனத்தை
பெற்றுள்ளது.
இந்தநிலையில், அந்த நாடுகளின் புவிசார் அரசியல் விளையாட்டுகளில், இலங்கை
பகடைக்காயாக மாறாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் இறையாண்மை
உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, சிறிய மற்றும் நடுத்தர நாடுகள், பெரிய
அதிகாரப் போராட்டங்களின் குறுக்குவெட்டில் சிக்கிக் கொள்ளும்போது என்ன
நடக்கும் என்பதை தெளிவாக காட்டுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, இந்த பாடம் தெளிவானது.
எனவே, இலங்கை அணிசேராமையை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் இலங்கையின் இறையாண்மை ஒருபோதும் சமரசம் செய்யப்படாமல் பார்த்துக் கொள்ள
வேண்டும் என்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.