சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல் என்று அமைச்சர் அலி சப்ரி ( Ali Sabry) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அலி சப்ரி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் எதிர்வரும் டிசம்பரில் சர்வதேச நாணய நிதியம் வழங்கவிருக்கும் அடுத்த தவணை மற்றும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) வழங்கவுள்ள தவணைகளை இழக்க நேரிடும்.
எட்டப்பட்ட உடன்படிக்கை
இதன்படி 2024 டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை நாடு 1.2 பில்லியன் முதல் 1.3 பில்லியன் டொலர் வரை இழக்கும். அதன் காரணமாக நாடு மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
சர்வதேச உறவுகள் மூலம் நாட்டின் கடனை மறுசீரமைக்க 17 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கையை எட்ட முடிந்திருப்பது நாம் பெற்ற பாரிய வெற்றி என்றே கூற வேண்டும்.
இன்று நாம் எமது வெளிநாட்டுக் கொள்கை, தேசிய தனித்துவம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்துள்ளோம்.
இன்று, பொருளாதார நெருக்கடியில் இருந்து மிக விரைவாக மீண்டு வருவதற்கு, உலகிற்கே எடுத்துக்காட்டாக நாம் மாறியுள்ளோம்.
சர்வதேசம் ரீதியிலான பாராட்டு
தற்போது, பாகிஸ்தான், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக எங்களிடம் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றன.
இந்த நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய தலைமைத்துவம் சர்வதேச ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளது.
நமது நாட்டைப் போன்று பொருளாதார நெருக்கடியை சந்தித்த லெபனான், வெனிசுலா, ஆர்ஜென்டினா, சிம்பாப்வே, கிரீஸ் ஆகிய ஐந்து நாடுகளில் கிரீஸ் மாத்திரமே பொருளாதார நெருக்கடியில் இருந்து இதுவரை மீண்டுள்ளது.
ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருந்து கிரீஸ் மீண்டு வர 12 ஆண்டுகள் சென்றன. அதன்படி குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்ட ஒரே நாடு இலங்கை ஆகும்.
இருப்பினும், குறுகிய அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக பல்வேறு நபர்கள் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.
இந்நாட்டின் பொருளாதார மீட்சியை ஒருங்கிணைப்பதற்கும் அதற்கு ஆதரவு வழங்குவதற்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேலும், பலதரப்பு ரீதியில் உலகளாவிய தெற்கிற்கான முன்னுரிமைகளை மேம்படுத்துவதற்கு அமைச்சுமட்டத்தில் பரந்த பங்களிப்பை வழங்கவும், பலதரப்பு மனித உரிமைகள் தொடர்பான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் முடிந்துள்ளது” என வலியுறுத்தியுள்ளார்.