எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பது தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachi) குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் கடுமையாக முன்னிலைப்படுத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க (Ratnayake) தெரிவித்துள்ளார்.
முழுமையான அதிகாரம்
இந்த திட்டமானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வாக்களிப்பு முடியும் வரை முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் வன்முறைகளை தடுக்க காவல்துறையினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.