எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) இன்று (09) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
25000 ரூபா சம்பள அதிகரிப்பு ஏற்படும் என்று கூற முடியாது எனினும் அரச ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அதிகரிப்பு ஏற்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்தார் எனினும் அரச ஊழியர்கள் சரியான தீர்ப்பினை அவருக்கு வழங்கியுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.