இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறுவதாக என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த கலந்துரையாடலின் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “இன்று கல்வி தொடர்பாக எங்களுக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனது அமைச்சகம் நடத்திய ஆய்வில், இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறுவதாக தெரியவந்துள்ளது.
புதிய கல்வி முறை
ஆண்டுதோறும் சுமார் 300,000 பேர் பாடசாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். மாணவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் நுழைகிறார்கள். இன்னும் சிலர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
அதன்போது, ஒரு பிள்ளை தனது உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், பொருத்தமான தொழில் பாதையில் செல்லவும் உதவும் கல்வி முறையின் அவசியத்தை கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “இன்றைய பிரச்சினை என்னவென்றால், அனைவரும் நல்ல ஊதியம் பெறும் வேலைகளைத் தேடுகிறார்கள். மற்றொரு பிரச்சினை என்னவென்றால், பலருக்கு லாபகரமான வேலைவாய்ப்பைப் பெற தொழில்நுட்ப திறன்கள் இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.