மேன்முறையீட்டு நீதிபதிக்கான பதவி உயர்வு குறித்து நீதிபதி
இளஞ்செழியனுக்கு (Manickavasagam Ilancheliyan) அநுர அரசு (Anura Government) திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.
யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (22.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே
குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு
மாகண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் (Vinthan Kanagaratnam) ஆகியோர் இவ்வாறு குற்றம்
சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு
அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய
நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காது
பழிவாங்கியுள்ளதை ஏற்க முடியாது.
பதவி உயர்வை வழங்க வேண்டும்
நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில்
பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை
மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்தக் காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால்
திட்டமிட்ட வகையில் தட்டிக்களிக்கப்பட்டு வந்தது.
இதன் உச்சமாக தற்போது அநுர அரசும் தகுதிகள் அனைத்தும் இருந்து திட்டமிட்டு
அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ள முயற்சித்துள்ளது.
இதை எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அந்தவகையில் அரசு குறித்த பழிவாங்கலை கைவிட்டு அவரது பதவி உயர்வை வழங்க
வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
இதேநேரம் அவ்வாறான சூழலை அரசு உருவாக்காது விட்டால் சிவில் சமூகங்கள்
ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கி போராடும் நிலை வரும்“ என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.