மட்டக்களப்பு(Batticaloa) விமான நிலையத்தின் எல்லையான திருப்பெரும்துறை பகுதியில் 12 நிலக்
கண்ணிவெடிகளை கண்ணிவெடி அகற்றும் சர்வதேச நிலச்சுரங்க ஆய்வு குழுவான
(எம்.ஏ.ஜி) அமைப்பினர் மீட்டெடுத்து நீதிமன்ற அனுமதியுடன் இராணுவத்தினர் அதனை
வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையானது நேற்றையதினம் (05) இடம்பெற்றுள்ளது.
யுத்தகாலத்தில் திருப்பெரும்துறை வேளாங்கன்னி தேவாலயத்திற்கு அருகில்
அமைக்கப்பட்ட விமானப்படை முகாமை சுற்றி அந்த பகுதியில் ஏராளமான கண்ணிவெடிகள்
நிலத்தில் புதைத்திருந்தனர்.
கண்ணிவெடிகள் அகற்றல்
இந்த நிலையில் அங்கிருந்து விமானப்படை முகாம் மூடப்பட்டு படையினர் வெளியேறிய
போதும் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருந்துள்ள
நிலையில் அவற்றை அகற்றுமாறு படையினர் எம்.ஏ.ஜி கண்ணிவெடி அகற்றும்
நிறுவனத்திடம் கோரியதையடுத்து அந்த பகுதியினை அவர்கள் அடையாளமிட்டு
கண்ணிவெடிகளை தேடி சோதனையிடும் நடவடிக்கையினை புதன்கிழமை (04) ஆரம்பித்தனர்.
இதன் போது அந்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 12 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து
மீட்டெடுத்தனர்.
இதனை உடனடியாக செயலிழக்க வேண்டியதையடுத்து நீதிமன்ற அனுமதியை
பெற்று மின்னேரியாவிலுள்ள குண்டுகளை செயலிழக்கும் இராணுவப் பிரிவினரை
வரவழைத்து அதனை வெடிக்கவைத்து செயலிழக்க செய்தனர்.
இதேவேளை குறித்த பகுதியில் மக்கள் குடியேறி வசித்துவருவதாகவும் தொடர்ந்தும்
கண்ணிவெடிகள் உள்ள பகுதிகள் அடையாளமிடப்பட்டு சோதனை நடவடிக்கை
இடம்பெற்றுவருகின்றதுடன் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் மனிதர்களோ
மிருகங்களோ இன்று வரை அதில் அகப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.