பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவிநகர்,
ஆராதிநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராம சேவையாளருக்கு எதிரான
கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை இன்று (21.12.2025) முன்னெடுத்தனர்.
100இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிராம சேவையாளர் நேரில் சென்று பார்வையிடவில்லை என
மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கிராம மக்களின் குற்றச்சாட்டு
தமது நிலமையினை பார்வையிடுமாறு தொலைபேசியூடாக கேட்ட குடும்பப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக
பார்வையிட்டு அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் உதவிகளையும் வழங்குமாறு கோரிய
போதும், கிராம
சேவையாளர் தம்மைப் பார்வையிட்டு அனர்த்தம் தொடர்பான எவ்வித பதிவினையும்
மேற்கொள்ளவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோரிக்கை முன்வைப்பு
குறித்த விடயம் தொடர்பில் பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் தமக்கு
தீர்வினை பெற்றுத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ககவனயீர்ப்புப் போராட்டத்தில் கிராம அமைப்புக்கள், கமக்கார
அமைப்புக்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

