யாழ் நகரத்தின் 24 ஆம் வட்டாரத்தில் தாராக்குளம் பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றிலிருந்து கழிவுநீர்கள் துர்நாற்றத்துடன் வெள்ளவாய்க்காலில்
வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறையற்ற செயற்பாடு கடந்த பல மாதங்களாகத் தொடர்ச்சியாக நீடித்து வருகின்றதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதிப் பொதுமக்களால் யாழ்.மாநகர சபையின் வட்டார உறுப்பினர்
இரத்தினம் சதீஸிற்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய நேற்று (19) மாலை கழிவுநீர் வெளியேற்றப்படும் பகுதியை அவர் நேரில்
பார்வையிட்டுள்ளார்.
வழக்குத் தாக்கல்
இந்த நிலையில் உடனடியாக யாழ்.மாநகர சபையின் முதல்வரை தொடர்பு கொண்டு யாழ்.மாநகர சபை உறுப்பினர் சதீஸ் இது தொடர்பாக தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற யாழ்.மாநகர சபையின் சுகாதாரக்
குழுத் தலைரும், மாநகரசபை உறுப்பினருமான சாருஜன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்
மதுசிகான் ஆகியோருடன் சேர்ந்து இதுசம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.
பின்னர் யாழ் மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் அவ்விடத்திற்கு
வரவழைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றப்பட்ட பகுதி நேரடியாகப்
பார்வையிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட உணவகத்தின் முகாமையாளருடன் கலந்துரையாடியதன் அடிப்படையில்
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில்
இவ்விடயம் சம்பந்தமாக வழக்குத் தாக்கல் செய்வதென யாழ்.மாநகர சபை சுகாதார
அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

