மேசைகளில் இருந்து நிர்வாகம் செய்யாமல் மக்களின் காலடிக்கு சென்று சேவை செய்யவே
நான் என்றும் விரும்புகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட
அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
” கிளின் சிறிலங்கா ” கருத்திட்டத்தினை செயற்படுத்துதல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளை
தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (10) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
சுற்றாடல், சமூக மற்றும் ஒழுக்க நெறிமுறை அணுகல் ஊடாக விரிவான மாற்றப்பட்ட
செயன்முறை ஒன்றின் மூலம் மேம்பட்ட சமூகம் ஒன்றினை உருவாக்கும்
எதிர்பார்ப்புடன் ” கிளின் சிறிலங்கா ” கருத்திட்டம் கடந்த 01ஆம் திகதி
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தெளிவுபடுத்தல்
மேற்படி கருத்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக
நடைமுறைப்படுத்துவது தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டமே ஜனாதிபதி செயலகத்தின்
உயரதிகாரிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா
முரளிதரன், ஏற்பாட்டில் ஐனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் ஏ.கவிதா
தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட
செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் தேசிய கலாசார மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தேசிய
திட்டமாகிய இத்திட்டத்தின் அரச உயர் அதிகாரிகளை தொளிவுபடுத்தும் குறித்த விசேட
செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.