மட்டக்களப்பில் (Batticaloa) விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை
செய்ய வேண்டும் என, மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தமையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை
வெள்ள நீரில் மூழ்கியுள்ளமைக்கு நட்ட ஈட்டை தர வேண்டும் என
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக இரு தினங்களாக பெய்துவரும் கனமழையினால் மட்டக்களப்பு
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள்
வெள்ள நீரில் மூழ்கி வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட
விவசாயிகள் ஊடகங்களுக்கு நேற்று (19) கருத்து தெரிவிக்கையில், “2024-2025ஆம் ஆண்டு பொரும்போக வேளாண்மை செய்கை தொடர்பாக முன்னோடி கூட்டத்தில்
எதிர்வரும் 20ஆம் திகதி நெல் அறுவடை என தீர்மானிக்கப்பட்டு முடிவு
எட்டப்பட்டது.
பூச்சி தாக்கம்
இருந்த போதும் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அறுவடை செய்யும்
நிலையில் வேளாண்மை விளைந்துள்ளதுடன் அறக்கொட்டி பூச்சி தாக்கமும் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதும் அனர்த்த முகாமைத்துவத்தால் எதிர்வரும் 18ஆம் திகதியில் இருந்து
கனமழை பெய்யும் விவசாயிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தனர்.
இதனையடுத்து
இரஜாங்க அதிபரை சந்தித்து கனமழைவர இருக்கின்றது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர்
அறுவடை செய்யவேண்டிய நிலையில் பாரியளவில் விளைந்த வேளாண்மை மற்றும்
அறக்கொட்டி பூச்சி தாக்கம் ஏற்பட்ட வேளாண்மை அறுவடை செய்ய வேண்டியுள்ளது. ஆகவே
அறுவடையை செய்ய அந்தந்த அமைப்புக்களை தீர்மானித்து முடிவெடுக்குமாறு கேட்டுக்
கொண்டோம்.
அதற்கு அரசாங்க அதிபர் வாய்மூலமாக ஒரு உத்தரவு தந்தார். அமைப்புக்கள் ஓம்
என்றால் உடனடியாக அறுவடை செய்யுமாறு மழை வெள்ளத்தில் பாதிக்காது செய்யுமாறு
தெரிவித்தார்.
வெள்ளத்தில் மூழ்கிய வேளாண்மை..
அந்தவகையில் ஒரு விவசாயி அறவடை செய்ததை ஆரம்பித்ததையடுத்து
அதனை சிலர், அமைப்புக்கள் என தெரிவித்துக் கொண்டு வேறு பெயர்களை சூட்டிக்
கொண்டு பச்சைக்காய்களை வெட்டப் போகின்றார்கள் என பொய்பிரசாரத்தை தெரிவித்து
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அறுவடை செய்வதை தடுத்தனர்.
பெரும்போக செய்கை என்பது ஒருவருக்கு முந்தும் ஒருவருக்கு பிந்தும்
இருந்தபோதும் விளைந்த வேளாண்மை நிற்காது இந்த மழைகாரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர்
வேளாண்மை தண்ணீரில் மிதக்கின்றது அழிவடைந்துள்ளது.
அத்துடன் அறக்கொட்டி பூச்சி
இருந்தும் விளைந்த வேளாண்மையை வெட்டிக் கொள்ள முடியாத நிலையை சிலர்
உருவாக்குகின்றனர் என்றால் இவர்கள் என்ன விவசாயிகள்
மூன்று அழிவு இடம்பெற்றுள்ளது. வெள்ளம், பூச்சி, நேரத்துக்கு வெட்டவில்லை இந்த
காரணத்தால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளது.
சில வெளிநபர்கள், அமைப்பு என இருப்பவர்கள் தடைபோட்டதால் எமது
வேளாண்மை நாசமாகியுள்ளது. இந்த நட்டத்தை அரசாங்கம் எப்படி தரமுடியம் மனித
உரிமையில் போய் தடை போட்டவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்ன
பதில் சொல்லபோகின்றனர்” என கேள்வியெழுப்பியுள்ளனர்.