நெருக்கடியான நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) 25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் அவரது செயற்பாடு ஏனையவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவில் இருந்து மீண்டெழுவதற்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
அனைவருக்கும் நிவாரணம்
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். அரச அதிகாரிகள் நெருக்கடி நிலைமை விளங்கி அர்ப்பணிப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது.
நாடு என்ற ரீதியில் இயற்கை அனர்த்தத்தை எதிர்க்கொண்டுள்ளதை போன்று எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்தாக குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்டுள்ளோம். நெருக்கடியான நிலையில் எங்கு குறைகள் உள்ளது என்பதை தேடிக்கொண்டு இவர்கள் திரிகிறார்கள்.

நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சியினர் ஊடகங்களில் மாத்திரம் தான் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால் எவ்விதத்திலும் இவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தான் செயற்படுகிறார்கள்.
அரச அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
25 கோடி ரூபாய் நன்கொடை
எதிர்க்கட்சியின் தலைவர்கள் அனர்த்த நிலைமையின் போது கண்டிக்கு சென்று அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை அரச அதிகாரிகள் கவனத்திற்கொள்ள கூடாது.

வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டும் என்று அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.
ஊழலற்ற அரச நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு உதவி கரம் நீட்டியுள்ளன.
நெருக்கடியான நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது செயற்பாடு ஏனையவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. மக்களுக்காக மக்களிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு ரூபாவையும் மக்களுக்காக பயன்படுத்துவோம்” என தெரிவித்தார்.

