பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது அரசாங்கத்தின் கொள்கை அல்லது
விருப்பங்களின் ஒரு பகுதியாக இருக்காது.
ஆனால் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது எச்சரிக்கையுடன்
பயன்படுத்தப்படும் என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றும் வரை இது அவசியம் என்றும் ரத்நாயக்க
கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாடு குறித்து, தமிழ் தேசியக்
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் மற்றும் ஐக்கிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் எழுப்பிய
கேள்விகளுக்கே பிமல் ரத்நாயக்க இந்த பதிலை வழங்கியுள்ளார்.
சிறீதரனின் பயணத்தடை
பயணத் தடையை மேற்கோள் காட்டி, குடிவரவு அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்
சிறீதரன், இந்தியாவுக்குச் செல்வதைத் தடுத்ததாக ஹக்கீம் இதன்போது சபையின்
கவனத்துக்கு கொண்டு வந்தார்.
அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்று ஹக்கீம் வாதிட்டார்,
இந்தநிலையில், தெளிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறீதரன் தனது பயணத்தைத்
தொடர அனுமதிக்கப்பட்டார் என்று ஹக்கீம் கூறினார்.
இந்த விடயத்துக்கு பதிலளித்த பிமல் ரத்நாயக்க, இந்த விவகாரம் குறித்து
விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தப் பிரச்சினை குறித்து ஆராயுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும்
அறிவிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த
ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினரின் சலுகைகளை உறுதி செய்வதில் அரசாங்கம்
உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.