கேரளாவில் (Kerala) முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலப்புழா மாவட்டம் முகம்மா கிராமத்தில் இது உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் இங்கு சில நாட்களுக்கு முன்பு காகங்கள் மொத்தமாக இறந்துள்ளன.
இதையடுத்து, அந்த காகங்களின் உடல் மாதிரியை பரிசோதனைக்காக போபால் (Bhopal) அனுப்பியதாகவும் அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முகம்மா கிராம பஞ்சாயத்து தலைவர் ஸ்வப்னா பாபு (Swapna Babu) தெரிவித்துள்ளார்.
பறவைக் காய்ச்சல்
ஆலப்புழா மாவட்டத்தின் தென் பகுதிகளில் வாத்துகளுக்கு மட்டுமே பரவி வந்த பறவைக் காய்ச்சலானது வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கோழி மற்றும் காகங்களுக்கு பரவி இருப்பதாகவும் மாவட்டத்தின் வடக்கு பகுதிகளுக்கும் இது பரவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் ஜமுனா வர்கீஸ் (Jamuna Varghese) கருத்து தெரிவிக்கையில், “பறவைக் காய்ச்சலின் தோற்றம் தற்போது வரை தெரியவில்லை.
கால்நடைத்துறை அதிகாரிகள்
இது புலம்பெயர்ந்த பறவைகளால் வருகிறதா? அல்லது பிற மாநிலங்களில் இருந்து இங்கு வந்த பறவைகளால் வந்ததா? என்று தெரியவில்லை.
இருப்பினும், இது மனிதர்களுக்கு பரவவில்லை அத்தோடு கால்நடைத்துறை அதிகாரிகள் தரும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் மற்றும் அறிவுறுத்தல்களையும் பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் பின்பற்ற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.