நாட்டில் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறைக்கு உதவும்
வகையிலும் மட்டக்களப்பு – பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம்
ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் 16ஆவது தடவையாக இம்முறை இந்த
இரத்ததானமுகாமினை நடாத்தியது.
இரத்ததானம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியுடன் இணைந்து இலண்டனை சேர்ந்த
சுதாகரன் கலிஸ்காவின் அனுசரணையுடன் இந்த இரத்ததானம் சிறப்பாக நடைபெற்றது.

பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர்
கே.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வில்
வைத்தியர்கள்,தாதியர்கள், கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள்
என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கழகத்தினால் இரத்ததானமுகாமினை குறிக்கும் வகையிலான சீருடை அறிமுகம்
செய்யப்பட்டதுடன் இரத்ததன முகாம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த இரத்ததானமுகாமில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் கலந்துகொண்டு
இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

