தேர்தல் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்புகள் தொடர்பாக இலங்கையின் அரசியல்
கட்சிகளுடன் பவ்ரல் அமைப்பு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்தாய்வு கூட்டங்களின் ஓர் அங்கமாக
மலையக அரசியல் அரங்கத்துடனான கலந்துரையாடல் ஹட்டனில் நடைபெற்றது.
நீதியும் நியாமுமான தேர்தல்களைக் கண்காணிப்பதற்கான மக்கள் இயக்கமான பவ்ரல்
நிறுவனப் பிரதிநிகளுக்கும் மலையக அரசியல் அரங்கத்தின் உயர் பீட
உறுப்பினர்களுக்கும் இடையிலான மேற்படி கலந்துரையாடலில் வாக்காளர்களைப் பதிவு
செய்தல், வாக்காளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல், முன்கூட்டிய வாக்களிப்பு
முறையை அறிமுகம் செய்தல், தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்தல், அரச
ஆதனங்களைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்தல், தேர்தல் கொள்கைப் பிரகடனங்கள்,
வேட்புமனு நிராகரிப்பைக் குறைத்தல், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள்
விஸ்தரிப்பு , தேர்தல் கால அட்டவணையை உறுதி செய்தல், தகைமை அடிப்படையில்
தேசியப் பட்டியல் வேட்பாளர்களைத் தெரிவு செய்தல், வேட்பாளர் சுயவிபரக்
கோவையைச் சமர்ப்பித்தல், கட்சி வாழுதல் குறித்த விதிமுறைகள் அமைத்தல், விசேட
தேவையுடையோரின் வாக்குரிமையை உறுதி செய்தல், பெண்கள் மற்றும் இளைஞர்
பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல், தேர்தல் பிரசாரச் சட்டங்கள், பிரஜைகளை
அரசியல் ரீதியாக வலுப்படுத்தல், தேர்தல்கள் நீதிமன்ற முறையை ஸ்தாபித்தல்,
தேர்தல் முறைமைகளும் ஆட்சி முறைமையும்
ஆகிய 21 தலைப்புகளின் கீழ் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் மலையக மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும்
வகையிலான பல முன்மொழிவுகளை எடுத்துரைத்துள்ளதோடு அவற்றை எழுத்து மூலமாகவும்
தேசிய மறுசீரமைப்பு மட்டத்துக்கு வழங்கவுள்ளதாகவும் மலையக அரசியல் அரங்கத்தின்
செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,

“மலையக மக்களின் குடியுரிமைப் பறிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மூன்று தசாப்த
காலமாக அரசியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே மலையக மக்கள் இந்த நாட்டில்
வாழவைக்கப்பட்டனர்.
இதன் பின்னாளில் இலங்கைக் குடியுரிமை கிடைக்கப்பெற்ற போதும்
கூட அவை அர்த்தமுள்ள குடியுரிமையாக அமையவில்லை.

இந்த மூன்று தசாப்த கால
அரசியல் இடைவெளியைச் சரி செய்யும் வகையில் நாடாளுமன்றம், மாகாண சபை
முறைமைகளில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்துக்கான தேர்தல் தொகுதி மற்றும்
பிரதிநிதித்துவச் சிறப்பு ஏற்பாடு உருவாக்கப்பட வேண்டும்.
இத்தகைய கலந்துரையாடல்களை மலையக மாவட்டங்கள் தோறும் அரசியல் அரங்கம்
முன்னெடுப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் தமது அடுத்த கலந்துரையாடலை
பதுளை மாவட்டத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் மயில்வாகனம் திலகராஜா
மேலும் கூறினார்.

