வவுனியாவில் விபத்தில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டாம் திகதி சம்பவித்த விபத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரன் விபத்தில் சிக்கிக் கொண்டார்.
எந்த முன்னறிவிப்பும் இன்றி அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான அடிபட்ட காயம் காரணமாக அவர் மயக்கநிலைக்கு தள்ளப்பட்டார்.
மேலதிக சிகிச்சை
உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் சிடி ஸ்கான் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தலையில் ஏற்பட்ட காயம் கடுமையான வீக்கம் மற்றும் உள்இரத்தக் கசிவுகளை ஏற்படுத்தியிருந்தது என்பதும் நரம்பு சத்திர மருத்துவர்க மூலம் உறுதிசெய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு, உயிரை காக்க தேவையான அனைத்து சிகிச்சைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.
ஆனால், மருத்துவர், தாதியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் முழு முயற்சியையும் எடுத்தபோதிலும், தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், அவரது மூளைச் செயற்பாடுகள் படிப்படியாக குறைந்து, இறுதியில் மூளை இறப்பு உறுதிசெய்யப்பட்டது.
மூளைச் செயற்பாடுகள்
இந்த இக்கட்டான நிலையிலும் அவர்களின் குடும்பத்தினர் அவரது இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர்.

இதனிடையே இலங்கையில் சிறுநீரக செயலிழப்பால் மாற்றுச் சிறுநீரகத்திற்காக பலர் உயிர்ப்போராட்டத்தில் இருக்கின்றனர்.
அந்தநிலையில், மரணமடைந்த இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு இன்று வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

