நுவரெலியா – கிரகரி வாவிக்கரையோரத்தில் (28) மாலை மட்டக்குதிரை ஒன்று, சிறுவன் ஒருவரை நெஞ்சு பகுதியில் தாக்கியுள்ளது.
குறித்த சிறுவன், கிரகரி வாவி கரையோர வீதியில் நடந்து சென்ற போது சவாரிக்காக
கொண்டு வரப்பட்ட மட்டக்குதிரை ஒன்று திடீரென சிறுவனை தாக்கி காயப்படுத்தியதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கை
அதன் பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த நுவரெலியா பொலிஸ்
நிலைய உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடு செய்து சிறுவனை தாக்கிய
மட்டக்குதிரையின் உரிமையாளர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக நுவரெலியாவில் சுற்றி திரியும் மட்டக்குதிரைகள் பிரதான வீதிகளில்
தாறுமாறாக ஓடி சுற்றுலா பயணிகளை உதைப்பதும், கடிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து
வருகின்றது. இதன் காரணமாக நுவரெலியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி
அடைந்து வருகின்றனர்.
எனவே, வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளை அப்புறப்படுத்த
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பிரச்சினையின்
தீவிரத்தை உணர்ந்து மட்டக்குதிரை வளர்ப்போருக்கு உரிய விழிப்புணர்வை
ஏற்படுத்தி, அதையும் மீறும் பட்சத்தில் மட்டக்குதிரையை பறிமுதல் செய்து
அதிகரித்த தண்டப்பணத்தை விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், வாகன சாரதிகளும்
கோரிக்கை விடுக்கின்றனர்.