ஈரானை தாக்கும் திட்டத்தை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ஈரான் தனது முக்கிய அணுசக்தி மையத்தை ஒரு மலையின் அடியில் 260 முதல் 300 அடி ஆழத்தில் கட்டமைத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆழத்தில் உள்ள இலக்குகளை தாக்க, சாதாரண குண்டுகள் போதாது என்பதே சிக்கலாக உள்ளது.
சந்தேகத்தில் அமெரிக்கா
இந்த நிலையில், அமெரிக்கா உருவாக்கியுள்ள GBU-57 A/B எனப்படும் ‘பங்கர் பஸ்டர்’ வகை குண்டுகள், வெடிப்பதற்கு முன் சுமார் 200 அடி வரை மட்டுமே துளையிட்டு செல்லும் திறனுடன் உருவாக்கப்பட்டவை.

எனவே, ஈரானின் ஆழமான நிலையினை இது நிச்சயமாகத் தாக்க முடியுமா என்பது பற்றி தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த குண்டுகள் 30,000 பவுண்ட் எடையுடன், GPS வழிநடத்தும் முறையில் இயங்கப்படுவதோடு இதனை ஏவுவதற்கு திறன் கொண்ட B-2 ஸ்பிரிட் விமானங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
முழுமையான வெற்றிக்கான ஆய்வு
அத்தோடு, குறித்த விமானங்கள் அமெரிக்க மாநிலமான மிசூரியில் உள்ள விமானப்படை தளத்தில் இருக்கின்றதால் ஈரானை அடைய சுமார் 15 மணி நேரம் தேவைப்படும்.

எவ்வாறாயினும், இஸ்ரேல் ஏற்கனவே ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்துவிட்டதால், அமெரிக்க விமானங்கள் ரகசியமாக பறக்க வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன.
போரில் இதுவரை இந்த வகை குண்டுகள் பயன்படுத்தப்படாததால், அதன் செயல் திறனை உறுதிப்படுத்துவதே அமெரிக்காவிற்கு தற்போதைய சவாலாக உள்ளது.
இந்த நிலையில், தாக்குதல் மேற்கொள்ளும் முன் முழுமையான வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற காரணத்தால் அமெரிக்கா இப்போதைக்கு எதிர்வினையைத் தாமதமாக எடுத்துக்கொண்டு வருகிறது.
https://www.youtube.com/embed/WaRuSCQesyc

