77வது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் குறைந்த செலவில் கொண்டாட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதேநேரம் கொண்டாட்டங்களை பார்க்க பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன இதனை இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
77வது தேசிய சுதந்திர தினம்
நாட்டின் கௌரவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு, பெருமையுடனும், பிரமாண்டத்துடனும் கொண்டாடப்பட வேண்டும்.
இருப்பினும், நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருப்பதால், 77வது தேசிய சுதந்திர தினத்தை குறைந்தபட்ச செலவில் கொண்டாடுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நிகழ்வுக்காக, 107 மில்லியன் ரூபாய் செலவானதாகவும், இந்த ஆண்டு கொண்டாட்டங்களில், முடிந்தவரை செலவுகளைக் குறைப்பதை நோக்காக கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.