தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடிய
எம்மை, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொலிஸார், மிலேச்சத்தனமாக நடத்தியது மனித உரிமை மீறல்களாகும், இதற்கு நீதியான அணுகுமுறைகளை பிரயோகிக்குமாறு வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தமக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதைகளையும், பௌத்த சிங்கள
ஆக்கிரமிப்பினையும் தாம் எதிர்த்தவேளை இடம்பெற்ற தாக்குதல்கள் என்பதால் இலங்கை அரச
கட்டமைப்பின்படி, இதற்கு ஒருபோதும் நீதி கிடைக்காது.
தையிட்டி போராட்டம்
அரச
கொள்கையும், சட்டங்களும், சட்ட அமுலாக்கமும், பௌத்த சிங்கள பேரினவாத
ஆக்கிரமிப்பிற்கு வலுச்சேர்ப்பவையாகவே பேணப்படுகின்றன. யாரும் எதிராக
அமையக்கூடாது என்பதில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பே இலங்கையில் நடைமுறையில்
உள்ளது.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை தொடர்கிறது. பௌத்த பேரினவாத விஸ்தரிப்பிற்கு எதிராக கடந்த காலத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் கூட இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை.
தையிட்டியில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஏகமனதாக முன்னெடுத்த சபைத்
தீர்மானத்தின் அடிப்படையில் பகிரங்க அகிம்சை வழி போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது.
அந்த போராட்டத்தில் நீதிமன்றின் உத்தரவுகளை
மதித்தே நாம் போராடினோம். அவ்வாறாகப் போராடிய எம்மீது பொலிஸார்
பிரயோகித்த சித்திரவதை, மனிதகுல நாகரீகத்திற்கு புறம்பான நடவடிக்கையாகும்.
ஆதாரங்களுடன் முறைப்பாடு
இது குறித்து, இலங்கையில் உள்ள பிரதான நாடுகளின் வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனங்கள்,
சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தாபனங்கள், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள்,
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் ஏனைய
தாபனங்களுக்கும் போதிய ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்துள்ளோம்.

இராணுவ மயமாக்கத்தின் கீழ் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அரச
அனுசரணையுடன் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை பாதிக்கும் வகையில்
கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகவே நாங்கள் தொடர்ச்சியாக
போராடி வருகின்றோம்.
அரசாங்கம் இவ்வாறான நீதிகோரிய அகிம்சை ரீதியிலான
போராட்டங்கள் மீது பொலிஸாரை ஏவி விட்டு அடக்குமுறைகளை மேற்கொள்வது நிறுத்தப்படவேண்டும் என கோரியுள்ளார்.

