யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுமொத்த வடக்கு மாகாணமும் இன்று ஒரு புதிய மாற்றத்தை
நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இருப்பினும், சுற்றுலாத்துறை குறித்தும்,
குறிப்பாக உள்வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவது
தொடர்பிலும் நாம் முழுமையான வெற்றியடைவதற்குச் சில சவால்களை
எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO) வடக்குப்
பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுடனான விசேட
கலந்துரையாடல் ஒன்றை யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை
(25.11.2025) நடத்தியது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர்
மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சர்வதேச தர தங்குமிட வசதிகள்
எமது பிரதேசத்தில் உயர்தரமான, சர்வதேச தரத்துக்கு இணையான தங்குமிட வசதிகள்
இன்னும் குறைவாகவே உள்ளன.
சுற்றுலாப் பயணிகள் தாம் செலவழிக்கும் பணத்துக்கு
ஏற்ற பெறுமதியை எதிர்பார்க்கிறார்கள். அந்ததரத்தை நாம் உறுதி செய்ய
வேண்டும்.
யாழ்ப்பாண நகருக்கு வெளியே, சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய
இடங்களில் அதிவேக இணைய வசதி, சீரான மின்சாரம் மற்றும் கழிவு முகாமைத்துவ
வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளன.
பலாலி விமான நிலையம் மற்றும் இந்தியாவுடனான கடல்வழிச் சேவைகள் விரிவடைந்து
வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது. ஆயினும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான
நீண்ட பயண நேரம் சுற்றுலா பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே,
கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவையை ஆரம்பிக்க வேண்டும்
என்ற கோரிக்கையை நாம் முன்வைத்திருக்கின்றோம்.
அத்துடன், மாகாணத்துக்குள்
சுற்றுலா பயணிகள் வசதியாகப் பயணிக்கக்கூடிய வீதிப் போக்குவரத்து மற்றும் பொதுப்
போக்குவரத்துச் சேவைகள் உருவாக்கப்படுவது அவசியமாகும்.

பயிற்சி பெற்ற சமையல் கலைஞர்கள்
மனிதவள மேம்பாடு விருந்தோம்பல் துறையில் முறையான பயிற்சி பெற்ற சமையல்
கலைஞர்கள், வரவேற்பாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் குறைவாக உள்ளனர்.
அதேபோல்,
ஆங்கிலம் மட்டுமல்லாது வேறு பல சர்வதேச மொழிகளையும் கையாளக்கூடிய தொழில்முறை
சுற்றுலா வழிகாட்டிகளுக்கான தேவை அதிகமாக உள்ளது. அனைத்துச் சுற்றுலாத்
தலங்களிலும், விடுதிகளிலும் ஒரே மாதிரியான உயர்தர சேவையை வழங்குவதற்குப் போதிய
பயிற்சியின்மை ஒரு தடையாக உள்ளது.
நாம் இன்றும் நல்லூர், யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் தீவுப்பகுதிகளை மட்டுமே
மையப்படுத்திச் சுற்றுலாவை முன்னெடுத்து வருகிறோம்.
இதனைத் தாண்டிச் சூழல்
சுற்றுலா, கலாசாரப் பட்டறைகள், பறவைகள் அவதானிப்பு மற்றும் உணவுச் சுற்றுலா
போன்ற புதிய அனுபவங்களை உருவாக்க வேண்டும்.
வடக்கு மாகாணம் ஆன்மீகச் சுற்றுலாவுக்கான அதிக ஈர்ப்பைக் கொண்டுள்ளது.
குறிப்பாக, மன்னாரில் இராமர் பாலத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை
உருவாக்குவது தொடர்பான பேச்சுக்கள் மன்னார் மாவட்டச் செயலரால்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் அதிகம்
உள்ளன.

வரலாற்று மற்றும் கலாசார இடங்கள்
சுற்றுலாப் பயணப் பொதிகள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை மட்டுமே மையமாகக்
கொண்டுள்ளன. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய
மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான சுற்றுலாத் திட்டத்தை நாம் வகுக்க
வேண்டும்.
பல வரலாற்று மற்றும் கலாசார இடங்கள் இன்னும் அடையாளம் காணப்படாமலோ அல்லது
போதிய அடிப்படை வசதிகள் இன்றியோ காணப்படுகின்றன.
சுற்றுலாத்தலங்களில்
மலசலகூடங்கள் இல்லாமையும், இருப்பவை உரிய சுகாதார வசதியுடன் இல்லாமையும்
பெரும் குறையாகும். உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இவற்றை நிவர்த்தி செய்ய
முயற்சிகள் எடுத்துள்ளோம்.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், உள்ளூராட்சி சபைகள் மற்றும் தனியார் துறை
ஆகியன ஒன்றிணைந்து செயற்படுவது வளங்களைச் சரியாகப் பங்கிடவும், தரத்தை
உயர்த்தவும் உதவும்.
முதலீடுகளைச் சரியாக மேற்கொள்ளவும், சேவைகளை
மேம்படுத்தவும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்த சரியான தரவுகள் எமக்குத்
தேவை.மாகாண நிர்வாகம் என்ற வகையில் எமது முழுமையான ஆதரவு என்றும் உங்களுக்கு
உண்டு, என்றார்.
இக்கலந்துரையாடலில், இலங்கைக்கு உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அமைப்பின்
தலைவர் மற்றும் செயலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சுற்றுலா மற்றும்
விருந்தோம்பல் முகாமைத்துவத் துறையின் நிகழ்ச்சித் திட்டத்தலைவர் பேராசிரியர்
கலாநிதி சிவேசன் சிவானந்தமூர்த்தி, வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக
உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையோர் எனப் பலர்
கலந்துகொண்டனர்.

