சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிவதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் தற்போதைய வைத்திய அத்தியட்சகர் கோபாலமூர்த்தி ரஜீவ் உறுதியளித்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல் இன்று (21) நடைபெற்றது.
சாவகச்சேரி வைத்தியசாலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பொறுப்பான வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இரத்தப்பரிசோதனை
இதேவேளை இந்த வைத்தியசாலையில் எக்ஸ்ரே சோதனை மற்றும் இரத்தப்பரிசோதனை செய்வதில் இதுவரை காலமும் உங்களுக்கு இருந்த தடைகள் என்ன, அவற்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தங்களிடம் ஏதும் திட்டங்கள் உள்ளதா என அமைச்சர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதலளித்த வைத்திய அத்தியட்சகர் “இரத்தப் பரிசோதனைகள் வெளியில் செய்வது என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. சில பரிசோதனைகளைச் செய்வதற்கான வசதிகள் இங்கு இல்லாததால் வெளியில் செய்ய வேண்டும் அல்லது போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.
இதற்காக தற்போது இரத்தம் பரிசோதனை செய்கின்ற இடத்திலேயே இங்கே செய்யக்கூடிய பரிசோதனைகளை காட்சிப்படுத்துமாறு கோரியுள்ளேன். இதன்பின்னர் இங்கே செய்யக்கூடிய சோதனைகளை வெளியில் செய்யச்சொன்னால் யாரும் என்னிடம் முறையிடலாம். அதற்கு நாங்கள் பொறுப்பு“ என உறுதியளித்துள்ளார்.
மக்கள் குற்றச்சாட்டு
அத்துடன் “இந்த வைத்தியசாலையில் 23 வைத்தியர்கள் இருக்கின்ற போது பகல் நேரத்தில் எத்தனை வைத்தியர்கள் இரவு நேரத்தில் எத்தனை வைத்தியர்கள் கடமையில் இருப்பார்கள் பொதுமகன் ஒருவர் கேள்வியெழுப்பியதுடன் இந்த வைத்தியசாலையில் 4 வைத்தியர்கள் தான் கடமையில் இருக்கின்றார்கள் என்ற விடயம் பொதுமக்கள் மத்தியில் பரவியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த வைத்திய அத்தியட்சகர் “இங்கு ஒரு அலகு 24 மணித்தியாலங்களுக்கு இயங்க வேண்டுமென்றால் 3 வைத்தியர்கள் அங்கு பணிபுரிய வேண்டும். குறைந்தது ஒரே நேரத்தில் 9 பேர் பணிபுரிந்தால் தான் வைத்தியசாலையை சீராக இயங்கவைக்க முடியும். பொதுமக்கள் பார்க்கின்ற 4 வைத்தியர்களும் வெளிநோயாளர் பிரிவில் கடமை புரிகின்றவர்களே“ என குறிப்பிட்டார்.
மேலும், இனிவரும் காலங்களில் சாவகச்சேரி வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிவதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளனவா என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பினார்.
இதற்குரிய வேலைத்திட்டங்களை செய்துகொண்டிருப்பதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க
https://www.youtube.com/embed/wEoCZmXA8ws