யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும்
நேற்றையதினம் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளதுடன் 05 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில்,
25 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில்
16 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளவை
செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல்
அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித
புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள
நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 20ஆவது நாளாக
முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்படும்
அகழ்வு பணியில், இன்றைய தினத்துடன் 25 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளன.
அவற்றில், 16 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 29
நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்போது, இன்றைய தினம் அகழ்ந்து
எடுக்கப்பட்ட 5 எலும்புக் கூட்டு தொகுதியுடனுமாக 81 எலும்பு கூட்டு தொகுதிகள்
முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 90எலும்பு கூட்டு
தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த சில தினங்களில் அடையாளம் காணப்பட்ட சில எலும்பு கூட்டு
தொகுதிகள் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமைக்கான, சான்றாக அவை
உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை, எலும்பு கூட்டு தொகுதி அடையாளம்
காணப்பட்ட முறைமை, பிரேத பெட்டியில் வைக்கப்பட்டமைக ஆகியவை காணப்படுவதனால் ,
அவை முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டமையால்,
அவற்றை மீளவும் மண் போட்டு மூடப்பட்டது.
அத்துடன் , மேலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படும்
பகுதிகளில் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, அவ்விடங்களில்
துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகள்
முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.