யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தியில் அகழப்பட்டு கொண்டிருக்கும் மனிதப்
புதைகுழிக்கு நீதியை நிலைபாட்டுவதற்கான, சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்கு
அனைத்து தரப்பினரையும் ஓரணியில் திரளுமாறு தென்னிந்திய பிரபல இயக்குனரும்
தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியை தோண்ட தோண்ட தினமும் விதவிதமான கொடூரங்கள்
அங்கே அரங்கேறி காட்சி அளிக்கின்றன.
நேற்று முன்தினமும் சிறியதொரு மனித
எலும்புத் தொகுதி ஒன்று பெரிய மனித எலும்புத் தொகுதியை அணைக்கும் விதத்தில்
எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள்
இது தாயினதும் சேயினதுமாகவே இருக்கக்கூடும்.
யுத்தத்தில் ஈடுபடாத தரப்பினரும் இங்கே படுகொலை செய்யப்பட்டு
புதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பல்வேறு வகையில் நிரூபணமாகிறது.

அதிலும்
மழலைகளும், சிறுவர்களும் உள்ளடங்குகின்றார்கள் என்பது மனித குலம் மன்னிக்க
முடியாத ஆகப்பெரிய கொடூரம்.
அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட இதுநாள் வரை எவ்வளவோ கொடூரமான காட்சிகளை
பார்த்துவிட்டோம்.
இன்னமும் தோண்ட தோண்ட என்னென்ன அவலங்களை, கொடூரங்களை
எல்லாம் காண வேண்டி இருக்குமோ என நினைக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.
எமக்கே இப்படி இருக்கும்போது இழந்த உறவுகளுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்பது
வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இது இவ்வாறு இருக்கையில் உள்ளகப் பொறிமுறை மூலம் செம்மணி மனிதப் புதை
குழிக்கும், தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் காணப்படுகின்ற ஏனைய மனிதப்
புதைகுழிகளுக்கும், வன்னி பெருநிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட
இனப்படுகொலைக்கும், இனப்பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது என்பது வேடிக்கையான
விடயம்.

அழித்தவர்களிடமே நீதியை கேட்டால் அவர்கள் வழங்குவார்களா என்ன?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட ஐக்கிய
நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாண
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கும் நேரில் சென்று அங்கே நிலைமைகளை
பார்வையிட்டார்.
பின்னர் அது குறித்த மனித புதைகுழி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு
எல்லாவிதமான உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என அவர் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

