யாழில் (Jaffna) மோட்டார் சைக்கிளை செலுத்த கற்றுத்தருவதாக கூறி பாடசாலை மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை அவரது கல்வி நடவடிக்கைக்காக ஏற்றி இறக்கும் சேவைக்காக 44 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மாணவியின் பெற்றோர் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
நேற்றைய தினம் (24) தனது முச்சக்கர வண்டி திடீரென பழுதடைந்து விட்டதாகக் கூறி குறித்த சாரதி மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
வீடு திரும்பிய மாணவி
இதன்போது, மாணவியிடம் மோட்டார் சைக்கிள் செலுத்த கற்றுத் தருவதாகக் கூறி மாணவியை முன் இருக்கையில் அமர்த்தி மாணவியிடம் குறித்த நபர் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளார்.
வீடு திரும்பிய மாணவி இது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பெற்றோரால் யாழ் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முச்சக்கர வண்டி சாரதியைக் கைது செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.