Courtesy: Sivaa Mayuri
பரஸ்பரம் நன்மை பயக்கும் அடிப்படையில் இலங்கைக்கு நீண்டகால உதவி வழங்குதாக, சீன உயர் அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் சீனாவின் துணை அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி திஸாநாயக்கவின் வெற்றி மற்றும் பொதுத் தேர்தலில் அவரது கட்சியின் அமோக வெற்றிகளை தொடர்ந்து, இலங்கையில் முற்போக்கான அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாட்டை எடுத்துரைக்கும் மாற்றங்களை சீன அமைச்சர் பாராட்டியுள்ளார்.
மனித வள மேம்பாடு
இந்தநிலையில், ஜனாதிபதி திஸாநாயக்கவின் தலைமையில் இலங்கையுடன் ஒத்துழைக்க சீனா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளின் இலக்குகளின் சீரமைப்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் அடிப்படையில் நீண்டகால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது இரண்டு தரப்பினரும் விவாதித்தனர்.
முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு உதவ சீனாவின் விருப்பத்தை பிரதிநிதிகள் குழு, இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கூடுதலாக, இலங்கையின் மனித வள மேம்பாட்டை மேம்படுத்துவதற்கு, குறிப்பாக கல்வித்துறையில் அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதன் மூலம், தமது ஆதரவை வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.