பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை (Gnanasara Thero) பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய உத்தரவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று (22) காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை கடந்த ஜூலை 18 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேரருக்கு பிணை வழங்கியிருந்தது.
வெளிநாட்டு பயணத் தடை
குரகல பிரதேசத்தில் இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, தேரரை 50,000 ரூபா பணப் பிணையிலும், தலா 500,000 ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேரருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்ததுடன் இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
மார்ச் 28, 2024 அன்று, ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ரூ. 100,000, தண்டப்பணம் செலுத்துமாறும் கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றவாளி என தீர்ப்பு
குரகல பௌத்த மடாலயத்தில் கூட்டப்பட்ட 2016 ஊடக சந்திப்பின் போது, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு சேதம் விளைவிக்கும் வகையில் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களில் தேரரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒவ்வொரு குற்றப்பத்திரிகைக்கும் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், தலா இரண்டு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன் இரண்டு தண்டனைகளையும் தனித்தனியாக அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேன்முறையீடு செய்ய அனுமதி
எவ்வாறாயினும், ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குறித்த அறிக்கை தற்செயலானது அல்ல, வேண்டுமென்றே செய்யப்பட்டது என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறான அறிக்கைகள் நாட்டில் மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, சமய நல்லிணக்கத்தை பேணுவதற்கு பொறுப்பேற்றுள்ள ஒரு மதத் தலைவர் என்ற ரீதியில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று வலியுறுத்தினார்.
மேலும், தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதியுள்ளதாக நீதிபதி ஞானசார தேரருக்கு தீர்ப்பை வழங்கும்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.