ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தலைநகரில் அதியுயர்
பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனித புதைகுழியின் மூன்றாம்
கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை குறைந்தது மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள கொழும்பு
துறைமுக மனித புதைகுழிகளை அண்டிய பகுதியில் இருந்து மண் அடுக்குகள்
அகற்றப்படும் விதத்தை நேற்றைய தினம் (27) அந்த இடத்திற்குச் சென்ற
ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர்.
இப்பகுதியில் மேலும் பல உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும்
என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.
நிதி பற்றாக்குறை
அதன் பின்னர், அப்பகுதியில் உடல்கள் கண்டறிய்பபடுமாயின் அவை அகழ்ந்து
எடுக்கப்படும் அவ்வாறு உடல்கள் கண்டறியப்படவில்லை எனின் பிரதேசம் துறைமுக
அதிகாரசபை அல்லது தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ தலைமையிலான
ஆய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2024 செப்டெம்பர் 28
சனிக்கிழமை இடைநிறுத்தப்பட்டதோடு, ஒக்டோபர் மாதத்தில் அகழ்வுப் பணிகளை
மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது.
எவ்வாறெனினும் தேவையான நிதி இல்லாமையால்
பணிகள் மீள ஆரம்பிக்கப்படவில்லை.
அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், தடயவியல் தொல்பொருள் பேராசிரியர்
ராஜ் சோமதேவ, மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியின் விசாரணையை
நீண்ட காலத்திற்கு இடைநிறுத்த முடியாது எனக் கூறியிருந்தார்.

எனினும், நிதி கிடைக்க நான்கு மாதங்கள் ஆகின. கிடைத்த பணத்தில் அகழ்வு பணிகளை
20 நாட்களுக்குள் முடிக்க எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சோமதேவ நீதிமன்றுக்கு
தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட அகழ்வு
மனித புதைகுழி விசாரணைகளுக்காக ஜனாதிபதி பணியகத்திலிருந்து நிதியை வழங்குவது
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (OMP) பொறுப்பாகும்.

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் முதற்கட்ட அகழ்வு பணியின் பின்னர்,
செப்டெம்பர் 13, 2024 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போது, குறைந்தது இரண்டு
பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டதுடன் மேலும் நான்கு மண்டை ஓடுகள்
குழியில் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் செப்டெம்பர் 26, 2024 அன்று இரண்டாம் கட்ட
அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது, மாலையில் அங்கு சென்ற
ஊடகவியலாளர்களுக்கு உள்ளே மனித எலும்புகள் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

ஜூலை 13, 2024 அன்று, கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்திற்காக பூமியைத்
தோண்டிய போது, நிலத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதல் முறையாக மனித
எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நீதிமன்றத்திற்கு விடயம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதவான் பண்டார
இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி
அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

