கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின்
செயற்பாடுகளை ஆரம்பிப்பதாக, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார
மண்டல லிமிடெட் அறிவித்துள்ளது.
பொது மற்றும் தனியார் கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த சர்வதேச
முனையம், இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக இயக்குனரான அதானி துறைமுகங்கள்
நிறுவனம், இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்
மற்றும் இலங்கை துறைமுக ஆணையகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பால் 35
ஆண்டு உடன்படிக்கையில், கட்டுதல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம்
ஒப்பந்தத்தின் கீழ் இயக்கப்படுகிறது.
இந்த திட்டம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்டுள்ளது.
அத்துடன் 1,400 மீட்டர் நீளக் கப்பல் பாதை மற்றும் 20 மீட்டர் ஆழத்தைக்
கொண்டுள்ளது.
பெருமையான தருணம்
கொழும்பில் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் முதல் ஆழ்கடல் முனையம்
இதுவாகும்.
இந்த முனையத்தின் கட்டுமானம் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த முனையம் இந்தியப் பெருங்கடலில் வர்த்தகத்தின் எதிர்காலத்தை
பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் திறப்பு இலங்கைக்கு ஒரு
பெருமையான தருணமாகும்.
இந்தத் திட்டம் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உள்நாட்டில்
உருவாக்கும் மற்றும் இலங்கைக்கு மகத்தான பொருளாதார மதிப்பைத் திறக்கும்
என்று இந்திய முதலீட்டாளர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

