அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.எம். பஸ்நாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மாவட்டச் செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற விவசாயக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கண்டி மாவட்ட பிரதி ஆணையாளர் டி.ஏ. ரணசிங்க மற்றும் பிரதேச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள்
மாவட்டத்தில் சுமார் 1700 ஹெக்டேயர் வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளன. இதில் 433 ஹெக்டேயர் பயிர் செய்யப்படாத நிலங்களும் அழிவுக்கு உள்ளாகியுள்ளன.

260 ஹெக்டேயர் நெற்பயிற்செய்கை முழுமையாக நாசமாகியுள்ளதோடு, 159 ஹெக்டேயர் நிலப்பரப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்துடன் மரக்கறிகள், சோளம் மற்றும் ஏனைய மேலதிகப் பயிர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 20,000 ஹெக்டேயர் பரப்பளவில் அமைந்துள்ள வாழைத் தோட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்களை முறையாகத் திரட்டி, அதற்கமைய இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும் போகப் பயிர்ச்செய்கைக்கான நீர்ப்பாசன வசதிகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

