தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாட்டை தள்ளுபடி செய்தமை சட்டத்திற்கு எதிரானது என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2022 மே 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த “Gotta go home” போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, மேல் மாகாணத்தின் அப்போதைய சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக போராட்டக்காரர் ஒருவர் தனிப்பட்ட வகையில் முறைப்பாடு தாக்கல் செய்தார்.
அந்த தனிப்பட்ட முறைப்பாட்டை தள்ளுபடி செய்ய அப்போதைய கொழும்பு தலைமை நீதிபதி எடுத்த தீர்மானம், சட்டத்திற்கு எதிரானது என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அறிக்கை
குறித்த போராட்டம் தொடர்பில் 2025 .08.14 அன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது..

2021ஆம் ஆண்டு ஏப்ரல் 09ஆம் திகதியிலிருந்து காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட “கோட்டா கோ கம” என்ற பெயரிலான அமைதிப் போராட்டம் களம் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வந்த “மைனா கோ கம” என்ற பெயரிலான அமைதிப் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அலரிமாளிகையில் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபகசவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவடைந்ததன் பின்னர் இரும்புக் கம்பிகளுடன் சிலர் காலி வீதிக்கு வந்து ‘மைனா கோ கம’ போராட்டக் களத்தின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பின்னர் ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒருசில சொத்துகளை தீக்கிரையாக்கியிருந்தார்கள்.
அந்தச் சந்தர்ப்பத்தில் தேசபந்து தென்னக்கோன் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அலரி மாளிகையிலிருந்து வந்து கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தமாறு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தேசபந்து தென்னக்கோனை கோரியுள்ளதாகவும் ஆயினும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உறுதியாகியது.
விசாரணைகளின் பின்னர் 2022ஆம் ஆண்டு ஜூன் 08ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் 10ஆம் திகதி சட்டமா அதிபருக்கு இந்த விவகாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த விவகாரத்தை ஆராய்ந்ததன் பின்னர் கோட்டை நீதவான் நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 22646/2022ஆம் இலக்க வழக்கில் சந்தேகநபராக தேசபந்து தென்னக்கோனை பெயரிடுமாறு சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையைத் தொடர்ந்து, அந்த ஆலோசனையை அதிகாரபூர்வமற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதோடு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிசங்க பந்துல கருணாரத்னவால் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி அந்த ரிட் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ரிட் கட்டளை
அந்த ரிட் கட்டளையை இரத்துச்செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு விசேட மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 2025ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் ரிட் கட்டளையை தடுத்து இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டது.
அந்த இடைக்கால தடையைத் தொடர்ந்து தன்னை கைதுசெய்வதைத் தடுக்குமாறு கோரி, தேசபந்து தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கைப் பத்திரத்தின் 13ஆவது பகுதியில் 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் விடயங்களை உறுதிப்படுத்தியதன் பின்னரே தான் செயற்பட்டதாகக் குறிப்பிட்டது.
காவல்துறை மா அதிபர் பெற்றுக்கொடுத்த ஆலோசனையை கவனத்திற்கொள்ளாமல் ஜனாதிபதி எவ்வாறான ஆலோசனையைப் பெற்றுக்கொடுத்தார் என்ற விடயம் இதுவரையில் தெளிவாகத் தெரியவில்லை.
குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட தரப்பினரை வெளியேற்றுவதற்கு தான் நடவடிக்கை எடுத்ததாக அவரின் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தாலும் விசாரணைகளில், ஒருசிலர் மைனா கோ கம அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியபோதும் கோட்டா கோகம போராட்ட களம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டபோதும் எந்தவொரு நடவடிக்கையை எடுக்காமல் குறித்த குழுவினர் போராட்டக்காரர்களைத் தாக்கி அவர்களின் உடைமைகளையும் சேதப்படுத்தியதன் பின்னர் குழப்பம் விளைவித்தவர்களை துரத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டதாகவும் தேசபந்து தென்னக்கோனின் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்திருந்தபோதும் அவர் குறித்த தரப்பினர்களின் ஒரு நபரை கூட கைதுசெயவதற்கு ஆலோசனை வழங்கியிருந்ததாக விசாரணைகளில் உறுதியாகவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022, ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியதன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி போராட்டக்காரர்களால் காவல்துறையிடம் ஒப்படைத்ததன் பின்னர் அதுதொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பீ 22516/2022ஆம் இலக்கத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான்
அந்த நிதி 2022 ஜூலை 28ஆம் திகதிவரை கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்காமையின் காரணமாக அதனை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தபோதும் கோட்டை காவல் நிலையத்தினூடாக இல்லாமல் கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினால் அந்த நிதி சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் உடனடி விசாரணை ஆரம்பிக்குமாறு 2022, ஜூலை 29ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய காவல்துறை மா அதிபரின் ஆலோசனையின்பேரில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அந்த விசாரணையில் ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றிலிருந்து போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி கோட்டை காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று அறிக்கையிட்டதன் பின்னர் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து அந்த நிதியை மறுதினம் அப்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு வழங்கியுள்ளமை தெரியவந்தது.
அந்த சட்டவிரோத உத்தரவு தொடர்பில் கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல் பரிசோதகர் சாகர லியனகே 2022, ஜூலை 09ஆம் திகதி இரவு 10.45 மணிக்கு நாளாந்த காவல் குறிப்பேட்டின் முதலாம் பக்க 20ஆம் பிரிவில் 1172ஆம் இலக்கத்தில் அறிக்கையிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி, வழக்குப் பொருளாக அடையாளப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளபோதிலும் தேசபந்து தென்னக்கோன் இதனை கவனத்திற் கொள்ளாமல் உடனடியாக அவர் ஏற்கனவே கூறியதுபோன்று செயற்படுமாறு உத்தரவிட்டதாக அதில் அறிக்கையிட்டிருக்கிறார்.
இதுதொடர்பான விசாரணை அறிக்கை 2023, பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி காவல்துறை மா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக தேசபந்து தென்னக்கோனுக்கு கோட்டை காவல் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த மேற்குறிப்பிட்ட தொகை நிதி தொடர்பில் சட்டபூர்வமற்ற உத்தரவை கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு பெற்றுக்கொடுத்ததனூடாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய அப்போதைய காவல் மா அதிபர் சி.டி.விக்ரமதுங்கவால் குற்றப்பத்திரிகை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

